CRIME
“சாதி வன்கொடுமையின் கொடூரம்..” மரத்தில் கட்டி வச்சு கொடூர அடி.. பாதி தலையை மழித்த சமூக விரோதிகள்.. 3 தலித் சிறுவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தின் பர்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மோட்டார் பம்ப் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று தலித் சிறுவர்கள் மரத்தில் கட்டப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, தலையின் பாதி மழிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த அப்பாவி சிறுவர்கள் பல மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். கோவிந்த் சிங், புத் சிங் கோண்ட் மற்றும் ராஜு விஸ்வகர்மா உள்ளிட்ட சமூக விரோதிகள் இச்சிறார்களைத் தடிகளால் தாக்கியதோடு, சாதிய வசவுகளால் அவமானப்படுத்தி இந்த மனிதாபிமானமற்றச் செயலை அரங்கேற்றியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சமூக அவமானம் மற்றும் அச்சத்தால் அச்சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதையும் பள்ளிக்குச் செல்வதையும் முழுமையாக நிறுத்தியுள்ளனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பர்கவான் போலீசார் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயான உர்மிளா சாகேத் தனது குடும்பத்தினருடன் சிங்ரௌலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி நியாயம் கோரினார். விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, சிங்ரௌலி எஸ்பி ஷியாஸ் கே.எம். இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விரிவான விசாரணை நடத்தப் பர்கவான் காவல் நிலையப் பொறுப்பாளருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் சிறார் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டவுடன், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதியளித்துள்ளார்.
