LATEST NEWS
கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..! 22 இந்தியர்கள் கதி என்ன..? ஏமன், சோமாலியாவில் 2 வணிகக் கப்பல்கள் கடத்தலால் பரபரப்பு..!!
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் இரண்டு வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மொத்தம் 22 இந்தியப் பணியாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரித்திரியா நாட்டுக் கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற ‘எம்டி ஷிபு 1’ என்ற கப்பல் ஏடன் வளைகுடாவில் கடத்தப்பட்டது. இதில் உள்ள 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் ஆவர்; தற்போதைய நிலவரப்படி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவின் கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவமாக, சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரை அருகே கேமரூன் நாட்டுக் கொடியுடன் சென்ற ‘எம்வி லுடிப்’ என்ற வணிகக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. இந்தத் துணிகரச் சம்பவத்தை 8 கடற்கொள்ளையர்கள் இணைந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பலில் 6 இந்தியப் பணியாளர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாவது கப்பல் மற்றும் அதில் பிணைக் கைதிகளாக உள்ள 6 இந்தியர்களின் தற்போதைய நிலை குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இரண்டு கப்பல்களையும் சேர்த்து மொத்தம் 22 இந்தியப் பணியாளர்கள் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
