LATEST NEWS
ஒரு பெண்ணை இப்படி பேசலாமா..? கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை அவரது மகனே மீறுவதா..? சத்யபாமாவுக்கு ஆதரவாக திமுக அரசை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னி அரசு..!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்யபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பெட்டி பாமா, பல்டி பாமா” என்று விமர்சித்ததோடு அவரது உடல் தோற்றம் குறித்துப் பேசியிருப்பது தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்டாலினின் இந்த உரைக்குத் தமிழ்நாடு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளார்.
அமைச்சர் வன்னி அரசு தனது பதிவில், “உருவக்கேலி செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தலைவரான மு.க.ஸ்டாலினே இப்படிப் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்தச் சமூகக் கட்டமைப்பில் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதே மிகவும் அரிதான ஒன்று என்றும், அதிலும் குறிப்பாக தலித் பெண்கள் பொதுவெளிக்கு வருவது அரிதினும் அரிது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய பெண்களின் வருகையை முடக்கும் வகையிலேயே ஆணாதிக்க சமூகம் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று சாடியுள்ள வன்னி அரசு, இதைக் கட்டுப்படுத்த கடந்த 1998 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்கள் “பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டத்தைக்” கொண்டு வந்தார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். அந்தச் சட்டத்தை அவரது சொந்த மகனான ஸ்டாலினே மதிக்காமல் மீறுவது எந்த வகையில் நியாயமாகும் என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
