CINEMA
ரஜினி ரசிகர்களுக்கு பயந்து தலைமறைவான நீலாம்பரி… “கொஞ்ச நாளைக்கு சென்னைக்கு வராதீங்க!” – உதவி இயக்குநர்கள் ரம்யா கிருஷ்ணனை எச்சரித்தது ஏன்…27 ஆண்டுகளுக்குப் பின் வெளியான படையப்பா பட ரகசியம்…!
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் திரைப்படம் ‘படையப்பா’. கடந்த 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அசாத்தியமான கதைக் களத்தைக் கொண்டிருந்த இப்படம், அதில் நடித்த அனைவரின் சிறப்பான நடிப்பினாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான இசையினாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு காவியமாக இடம்பிடித்துள்ளது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு இணையாக, சில இடங்களில் அவரைவிட ஒரு படி மேலாகப் பேசப்பட்ட கதாபாத்திரம் தான் ‘நீலாம்பரி’. இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நீலாம்பரி கதாபாத்திரம் குறித்தும், படம் வெளியான சமயத்தில் தான் எதிர்கொண்ட சுவாரசியமான அனுபவம் குறித்தும் ரம்யா கிருஷ்ணன் பல உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.
படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்ததால், படம் ரிலீஸாகும் சமயத்தில் சில நாட்களுக்கு சென்னையில் இருக்க வேண்டாம் என்று உதவி இயக்குநர்கள் தன்னிடம் கூறியதாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்கள் பயந்தது போலவே படம் வெளியான போது, தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஸ்கிரீன்களைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் சென்னையில் இல்லாமல் வேறு ஊருக்குச் சென்று தலைமறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் எந்த அளவுக்கு அந்தப் படத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டாடினார்கள் என்பதற்கு ரம்யா கிருஷ்ணனின் இந்த நினைவலைகளே சான்றாகும்.
