CINEMA
ராஜாவுக்கு வயசே ஆகாதா… 82 வயதிலும் இளம் இசையமைப்பாளர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் இசைஞானி…”நான் நடந்தாலே சாதனைதான்…” மேடையில் கர்ஜித்த இசைஞானி… அரங்கமே அதிர்ந்த அந்த நொடி…!
இசை உலகத்தின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது 82 வயது ஆகிறது. ஆனால், அவரது சுறுசுறுப்பையும் இசையின் மீதான காதலையும் பார்க்கும்போது ‘ராஜாவுக்கு வயது ஆகுமா ஆகாதா?’ என்ற ஆச்சரியமே எல்லோரிடமும் எழுகிறது. இந்த வயதிலும் தன்னை எப்போதும் பிஸியாக வைத்திருக்கும் அவர், இளம் இசையமைப்பாளர்களுக்கே சவால் விடும் வகையில் தொடர்ந்து இயங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஜமா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் பாடல்கள் வழக்கம்போல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், அடுத்ததாக லெனின் பாண்டியன் இயக்கத்திலும், இளையராஜாவின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் புதிய படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். குறிப்பாக, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் பின்னணி இசையை மட்டும் தனியாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படங்களைத் தாண்டி, மேற்கத்திய செவ்வியல் இசையான சிம்பொனி படைப்பதிலும் இளையராஜா புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறார். கடந்த ஆண்டு லண்டனில் தனது புதிய சிம்பொனியை வெற்றிகரமாக அரங்கேற்றி உலகளாவிய வரவேற்பைப் பெற்ற அவர், தற்போது அடுத்த சிம்பொனியை எழுதும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, நேற்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசைக்கச்சேரியில் தனது சிம்பொனி இசையை ரசிகர்களுக்கு வாசித்துக் காட்டி அசத்தினார். ஏராளமான திரையுலக பிரபலங்களும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, இருவேறு இசை கலாசாரங்களை இணைக்கும் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது.
இந்த நெகிழ்ச்சியான மேடையில் பேசிய இளையராஜா, “இது இசை உலகத்தின் சரித்திரத்திலேயே ஒரு புதிய சரித்திரம். சாதனைகளுக்காகவோ, விருதுகளுக்காகவோ காத்திருப்பவன் நான் இல்லை; நான் நடந்தாலோ, பேசினாலோ அதுவே சாதனைதான்” என்று தனது கம்பீரமான பாணியில் பிரகடனப்படுத்தினார். அவரது இந்த ஆளுமைமிக்க பேச்சைக் கேட்டு அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 82 வயதிலும் குறையாத வீரியத்துடன் வலம் வரும் இளையராஜாவின் இந்த ‘கம்பீரமான கர்வமே தனி அழகுதான்’ என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
