CINEMA
“நெகட்டிவ் விமர்சனங்களால் 100 கோடி படம் காலி…”விமர்சகர்களால் நசுக்கப்பட்ட கனவு…”LIK வசூல் சரிவுக்கு இதுதான் காரணமா… முதன்முறையாக வாய் திறந்த விக்னேஷ் சிவன்…!”
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பிறகு அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தது வரை பல பின்னடைவுகளைச் சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நயன்தாரா தயாரிப்பில் உருவான இப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தனது படம் தோல்வியடைந்ததற்கு ஆன்லைனில் பரப்பப்பட்ட அதீத நெகட்டிவ் விமர்சனங்கள் தான் முக்கிய காரணம் என விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் நீண்ட ஆதங்கப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், இது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தனது பதிவில் விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியுள்ள விக்னேஷ் சிவன், “திரைப்பட விமர்சனங்கள் தங்களின் புத்திசாலித்தனத்தையோ அல்லது மேன்மையையோ வெளிப்படுத்தும் நோக்கில் மட்டுமே எழுதப்படுகின்றன. அவை பார்வையாளர்களைப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விடாமல் தடுத்து, வளரும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் கனவுகளை நசுக்குகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல் வார இறுதியில் நல்ல வசூலைப் பெற்ற இப்படம், அதன் பிறகு அப்படியே தலைகீழாக மாறியது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். ஒரு வித்தியாசமான மற்றும் அசல் தன்மையுள்ள நேர்மையான தமிழ்ப் படமாக உருவான இதற்கு, பார்வையாளர்களிடம் இருந்து இன்னும் சற்றுத் தாராள மனப்பான்மை கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2040ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, காதலைக் கணிக்கும் ‘Love Score’ செயலி மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் ஒரு சுவாரசியமான கதையாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. தியேட்டரில் 66 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த இப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகிப் பெரும் பாசிட்டிவ் வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறிய விக்னேஷ் சிவன், “ஆன்லைன் நெகட்டிவிட்டி காரணமாகவே தியேட்டரில் பார்க்கத் தவறிவிட்டதாகப் பலரும் எனக்கு மெசேஜ் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், “ஓடிடியில் பார்த்துவிட்டு தியேட்டரில் மிஸ் செய்துவிட்டேன் என்று கூறுபவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்; தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் உண்மையான ரசிகர்களே படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்” என்று விக்னேஷ் சிவனுக்குப் பதிலடி கொடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
