LATEST NEWS
செல்போனில் காதலனுடன் பேசிய அக்கா… மகனை சமாதானப்படுத்தி வெளியே சென்ற பெற்றோர்…. அடுத்த நொடியே நடந்த கொடூர சம்பவம்…. பெரும் பரபரப்பு…!!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அண்மையில் ஊரில் நடந்த ஆலயத் திருவிழாவிற்காக வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது ராமலட்சுமி தனது காதலனுடன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த முத்துகிருஷ்ணன், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு மாடுகளுக்குத் தீவனம் வைப்பதற்காக வெளியே சென்ற சமயம் பார்த்து, ராமலட்சுமி மீண்டும் தனது காதலனுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த தம்பி, அக்காவைத் தடுத்துக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, கோபத்தின் உச்சியில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமலட்சுமியைக் கொடூரமாக வெட்டியுள்ளார்.
வெளியே சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது, அங்கு ராமலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், பலத்த காயமடைந்த ராமலட்சுமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சுத்தமல்லி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கொலையாளி முத்துகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்தத் தம்பியே தனது அக்காவைக் காதல் விவகாரத்திற்காக வெட்டிக் கொலை செய்த இந்த பயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
