CINEMA
என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி…சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு… ஆனா 3 வருஷமா படமே இல்லை…பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் நிவேதா பெத்துராஜின் வைரல் போஸ்ட்…!
கடந்த 2016-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் பொதுவாக நடிகைகள் 5 ஆண்டுகளைக் கடப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் நிலையில், த்ரிஷா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிவேதா பெத்துராஜின் இந்த மைல்கல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ திரைப்படத்தில் நடித்த நிவேதா, ‘மெண்டல் மதிலோ’ படத்தின் மூலம் டோலிவுட்டிலும் தடம் பதித்தார். தொடர்ந்து ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத்தமிழன்’ எனப் பல முக்கியத் திரைப்படங்களில் நடித்தார். எனினும், கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘Boo’ திரைப்படத்திற்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்குத் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான ‘பருவு’ என்ற தெலுங்கு வெப்சீரிஸிற்குப் பிறகு ஓடிடியிலும் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்தது.
இந்நிலையில், சினிமாவில் தனது 10 ஆண்டு காலப் பயணத்தைக் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் நிவேதா பெத்துராஜ் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. என்னை நம்பியவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், எனக்குப் போட்டியாக இருந்தவர்களுக்கும், என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். சினிமா உலகில் பல இளம் நடிகைகள் வாய்ப்புகளின்றி காணாமல் போகும் சூழலில், நிவேதா பெத்துராஜ் மீண்டும் பழையபடி பல படங்களில் கமிட் ஆகி, வெள்ளித்திரையில் வலம் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
