LATEST NEWS
பணம், பதவிக்காக நான் வரவில்லை… மக்கள் பணிக்காகவே இந்த முடிவு… எக்ஸ் தளத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!
திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இன்று காலை பத்து மணிக்குத் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிகாரத்தைக் கைப்பற்றவோ அல்லது பணம் சம்பாதிக்கவோ தான் ஒருபோதும் அரசியலுக்கு வர நினைத்ததில்லை என்றும், தனக்கு நெருக்கமான ஒரு தலைவருக்குப் பக்கபலமாக இருந்து மக்கள் பணியாற்றவே விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் தன்னை நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது இந்த புதிய பயணத்திற்குப் பொதுமக்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் மிகவும் அவசியம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை அவர் வெளியிட்டுள்ள பிரத்யேகக் காணொளியில், அரசியல் களத்திற்குத் தான் வர நேர்ந்ததன் பின்னணி, இது குறித்த அவரது தாயாரின் மனவோட்டம் மற்றும் அவரது வாழ்வை மாற்றிய சுவாரசியமான திருப்பங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசியுள்ளார். இந்த வீடியோப் பதிவை முழுமையாகப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகத் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பாக ராகவா லாரன்ஸ் வேட்பாளராகக் களம் இறங்கப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது இந்த அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
