Uncategorized
மக்கள் என்ன உங்க அடிமைகளா…? எதிர்த்து போராடினால் கைது செய்வீர்களா..? மத்திய அரசை சாடிய மும்பை உயர்நீதிமன்றம்..!!
மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்துப் போராடியதற்காக ஒருவரை நகரத்திற்குள் நுழையத் தடை விதித்த மும்பை காவல்துறையின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி சயீத் அகமது என்பவருக்கு, மும்பைக்குள் நுழைய ஓராண்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி மாதவ் ஜாம்தார், “இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளா?” என்று காவல்துறையினரை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். வினாத்தாள் கசிவு போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடுவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும், அதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையினர் ஒன்றும் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேலை செய்யும் ஊழியர்கள் அல்ல, அவர்கள் பொதுமக்களின் ஊழியர்கள் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். ‘பாஜக அரசு ஒழிக’, ‘அமித் ஷா ஒழிக’ போன்ற முழக்கங்களை எழுப்புவது அரசியலமைப்புச் சட்டம் 19 மற்றும் 21-ன் படி குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் என்பதால், இந்தத் தடை உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது எனக்கூறி அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
