LATEST NEWS
“ஆட்சியை கவிழ்க்க ஸ்கெட்ச் போட்டதே அவங்கதான்” 180 கோடி பேரம், கார்ப்பரேட் பின்னணி… “ஹோட்டலில் ஒருவாரம் தங்கி” தவெக அரசுக்கு எதிராக அம்பலமான நள்ளிரவு சதித்திட்டம்…!!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வந்தனர். இதனால் தவெக குதிரை பேரம் நடத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான தியாகராஜன், நரேஷ் மற்றும் கரூர் திமுக பிரமுகர்கள் ரமேஷ், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த செல்வன், அதிமுக பிரமுகர் சீனிவாசன், ராஜேஷ் ஆகிய மேலும் 3 பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
கைதானவர்கள் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில்தான் இந்த பேரத்தை நடத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும், தவெக ஆட்சியை கவிழ்க்க மொத்தம் 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டதாகவும், சென்னையின் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஒரு வாரமாக இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தச் சதியில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
