LATEST NEWS
இனி ‘நோ’ வெயிட்டிங்..! உடனுக்குடன் கிடைக்கும் சான்றிதழ்கள்.. வருவாய் துறையின் அதிரடி திட்டம்..!!
தமிழ்நாட்டில் பொது மக்கள் சான்றிதழ்களை விரைவாகப் பெறுவதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒரு முக்கிய புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் ஜாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்களைப் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்யப்பட்ட பிறகே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்த மூன்றடுக்கு ஆய்வு நடைமுறையானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதால், தற்போதைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப இதில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி அல்லாத இதர ஜாதி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று போன்ற குறிப்பிட்ட சில சான்றிதழ்களுக்கு வருவாய் ஆய்வாளரின் ஆய்வை முழுமையாகத் தவிர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்த உடனேயே அந்த விண்ணப்பம் நேரடியாகத் தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்குச் சென்றுவிடும். இந்த இரண்டு கட்ட ஆய்வின் மூலம் பொது மக்களுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி மிக விரைவாகச் சான்றிதழ்கள் கிடைக்கும். மேலும், தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் போல இந்த முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், வருவாய் துறை அதிகாரிகளின் பணிச்சுமை குறைவதோடு பொது மக்களும் சான்றிதழ்களுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
