CRIME
ரயில் தண்டவாளத்துல போய் செத்துடு..! 11 வயது சிறுமிக்கு சுடுதண்ணீர் ஊற்றி, கரண்டியால் சூடு வைத்த சித்தி… ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்..!!
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் கயல்விழி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அந்த குழந்தையை சித்தி கயல்விழி தொடர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.
கயல்விழி அந்த சிறுமிக்கு சூடாக்கிய கரண்டியால் உடலில் சூடு வைத்தது, சுடுநீரை ஊற்றியது, மற்றும் கடுமையாக அடித்து துன்புறுத்தியது போன்ற பல்வேறு கொடுமைகளைச் செய்துள்ளார். மேலும், “ரயில்வே தண்டவாளத்தில் போய் விழுந்து செத்துவிடு” என்று கூறி குழந்தையை மிரட்டியுள்ளார். சிறுமி அலறி துடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தட்டிக்கேட்டபோது, “இது எங்கள் குடும்ப பிரச்சினை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று கயல்விழி அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான “Childline 1098”-க்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மொடக்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆதாரங்களின் அடிப்படையில் சித்தி கயல்விழி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கயல்விழியை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
