LATEST NEWS
“இனி போஸ்ட் ஆபீஸ் போக வேண்டாம்..! பள்ளிகளுக்கே வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’..! தபால் துறையின் அதிரடி அறிவிப்பு..!!
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டத்தில், அதிக அளவில் மாணவிகளை இணைக்க தபால் துறை புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, புதிய நிதியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், பெற்றோர்கள் தபால் நிலையங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலேயே சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த தபால் துறை விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க விரும்பும் பெண் குழந்தை இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், 10 வயதிற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் தொடங்கப்பட முடியும்; ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்பதோடு, இதற்கு வருமான வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுவதால் பெற்றோர்களிடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 3.92 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.2.59 லட்சம் கோடிக்கும் மேல் சேமிப்பு திரட்டப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இத்திட்டத்தில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 38.90 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.31,211 கோடிக்கும் மேல் சேமிப்புத் தொகை திரட்டப்பட்டுள்ளது. இதில் சென்ன மண்டலத்தில் மட்டுமே 11.3 லட்சம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
