CRIME
சொந்த தங்கை செய்த துரோகம்.. வங்கியின் மிரட்டல்… ஜூஸில் விஷம் கலந்து குடித்த மேலாளர் குடும்பம்..! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய விபரீத முடிவு எடுத்தார். அதன்படி, விகாஸ் பாதீஷ், அவரது மனைவி தமன்னா, 13 வயது மகள் குவாஹிஷ் மற்றும் 11 வயது மகன் கனவ் ஆகிய நான்கு பேரும் பழச்சாற்றில் சல்பாஸ் என்ற விஷத்தைக் கலந்து குடித்தனர். விஷத்தின் வீரியத்தால் உடல்நிலை மோசமடைந்த அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராஜீந்திரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விகாஸ் பாதீஷும், மறுநாள் காலையில் அவரது மகள் குவாஹிஷும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவரது மனைவியும், மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கூட்டுத் தற்கொலை முயற்சிக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான பின்னணியை, மருத்துவமனையில் மரணத்துடன் போராடி வரும் விகாஸ் பாதீஷின் மனைவி தமன்னா, நீதித்துறை நடுவர் முன்னிலையில் வாக்குமூலமாக அளித்துள்ளார். விகாஸ் பாதீஷ் தனது சொந்த சகோதரிக்கு சுமார் 55 லட்ச ரூபாய் பணத்தை கடனாகக் கொடுத்துள்ளார். இதில் பெரும் கொடுமை என்னவென்றால், இந்த 55 லட்ச ரூபாயில் சுமார் 45 லட்ச ரூபாயை விகாஸ் தான் வேலை செய்த வங்கியில் இருந்தே கடனாகப் பெற்று தன் சகோதரிக்குக் கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அவரது சகோதரி அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கியின் கடன் மற்றும் வட்டி அதிகரித்ததோடு, சக வங்கி அதிகாரிகள் விகாஸை தவணை தொகையைச் செலுத்துமாறு மிகக் கொடூரமாகப் பிராயசித்தம் செய்து நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த மன உளைச்சலால் விகாஸ் தனது வங்கி மேலாளர் வேலையையும் இழந்துள்ளார். இதன் காரணமாக அந்தக் குடும்பம் முற்றிலும் வருமானமின்றி முடங்கியது.
பாதிக்கப்பட்ட தமன்னா பாதீஷ் அளித்த அதிகாரப்பூர்வ வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக விகாஸின் சகோதரி, விகாஸின் மூத்த சகோதரர் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதோடு, வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் விகாஸை மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தியதே இந்தக் குடும்பத்தின் இத்தகைய முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பட்டியாலா நகர காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
