LATEST NEWS
பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா..? ஆண்களுக்கு கிடையாதா.? “என்னை கார்ல கூட்டிட்டு போங்க” சிங்கப்பெண் போலீசாரிடம் போதையில் வம்புக்கு இழுத்த வக்கீல் அதிரடி கைது..!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பெண் போலீசாரிடம், வக்கீல் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த 25 வயதான வக்கீல் வினோத் மிஸ்ரா என்பவர், முழு போதையில் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா மற்றும் போலீஸ் சவுமியா ஆகியோரிடம் சென்று வம்புக்கு இழுத்துள்ளார்.
அப்போது அந்த வக்கீல், “பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா? ஆண்களுக்கு இல்லையா? உதவி செய்யத்தானே சிங்கப்பெண் படையில் இருக்கீங்க, உங்கள் வாகனத்தில் என்னை ஏற்றி என் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுங்கள்” எனக் கூறி பெண் போலீசாரிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா அவரை தள்ளி நிற்குமாறு எச்சரித்தபோதும், அவர் கேட்காமல் பெண் போலீசாரை அவதூறாகப் பேசி, அவர்களைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், போதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட வினோத் மிஸ்ராவை உடனடியாகப் பிடித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீல் வினோத் மிஸ்ராவை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
