LATEST NEWS
“என் மகள் தப்பு பண்ணியிருந்தா அவள தூக்குல போடுங்க… எங்கள ஏன் சித்திரவதை பண்றீங்க..?” கேதன் கொலை வழக்கில் கதறிய சியாவின் தந்தை..!!
பூனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயலின் தந்தை பிரவீன் கோயலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 8.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,172 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் இல்லாத கிடங்கைப் பயன்படுத்தியது மற்றும் பேக்கேஜிங் விதிகளை மீறியது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக நடவடிக்கைக்குப் பிறகு சியா கோயலின் தந்தை பிரவீன் கோயல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடித்தார். சட்டம் மற்றும் நீதித்துறையை தான் முழுமையாக மதிப்பதாகக் கூறிய அவர், “என் மகள் தவறு செய்திருந்தால், அவள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவளுக்குத் தூக்குத் தண்டனை கூட கொடுங்கள்; ஆனால் அதற்காக எங்கள் குடும்பத்தை ஏன் சித்திரவதை செய்கிறீர்கள்? அவளது செயலுக்காக எனது மனைவி, மகன் மற்றும் எனக்கு ஏன் தண்டனை வழங்க வேண்டும்? இதனால் எங்கள் குடும்பம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது” என்று உருக்கமாகக் கேட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி, 20 வயதான சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி ஆகியோர், சியாவின் நிச்சயிக்கப்பட்ட வரனான கேதன் அகர்வாலை லோஹாகாட் கோட்டைக்கு மலையேற்றம் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சமயம் பார்த்து கேதனை ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது சியாவும் அவரது காதலரும் எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சியா மற்றும் சேத்தன் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் ராஜஸ்தான் கோயில் பகுதியிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
