LATEST NEWS
“மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும்…!” ஜாமினில் வந்தும் அடங்காத பேச்சு…தமிழக வாக்காளர்களைச் சீண்டிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..! மேடையிலேயே சலசலப்பு..!!
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய வழக்குகளில் சிக்கிய இவர், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்த அவதூறு வழக்குகளில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மேடையில் பேசிய அவர், ஜாமினில் வந்த பிறகும் தனது பாணியை மாற்றாமல், தமிழக வாக்காளர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, “சில பேருக்குச் சொன்னால் புரியும், சில பேருக்கு அனுபவித்தால்தான் தெரியும். ஆனால், தமிழக மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த 2026 தேர்தல்தான்” என்று பேசி அதிர வைத்தார். அவர் பொதுமேடையில் பேசியது, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டினார். “திமுக தொடங்கப்பட்ட இந்த 75 ஆண்டு காலத்தில் தமிழகத்திற்கும், அதன் மக்களுக்கும் எத்தனையோ எண்ணற்ற திட்டங்களை அள்ளித் தந்துள்ளோம். குறிப்பாகக் கடந்த 5 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை வழங்கியுள்ளார். ஒரு நாளைக்கு இருக்கும் 24 மணி நேரத்தில், 21 மணி நேரத்தை மக்களுக்காகவே செலவழித்து, தன் வாழ்வையே தேய்த்துக்கொண்ட ஒரு தலைவர் இந்த உலகிலேயே மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
