LATEST NEWS
ச்ச இந்தக்காலத்துல இப்படியொரு பையனா..? ஆன்லைனில் டயப்பர் ஆர்டர் செய்த பெண்.. டெலிவரி பாய் சொன்ன அந்த வார்த்தை… நெகிழ்ந்துபோன இணையவாசிகள்..!!
பெங்களூருவில் ஆன்லைன் மூலம் டயப்பர் ஆர்டர் செய்த பெண்ணிற்கு, டெலிவரி செய்ய வந்த இளைஞர் காட்டிய அதீத புத்திசாலித்தனமும் அக்கறையும் தற்பொழுது சமூக ஊடகங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தைக்கு ஆன்லைனில் டயப்பர்களை ஆர்டர் செய்திருந்தார். அந்தப் பார்சலை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியர், வீட்டின் காலிங் பெல்லை அடிக்காமல், அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுத்து வெளியே வருமாறு கூறியுள்ளார்.
பார்சலை வாங்கிய அந்தப் பெண், காலிங் பெல் இருக்கும் போது ஏன் போன் செய்தீர்கள் என்று அந்த இளைஞரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அந்த இளம் டெலிவரி ஊழியர் அளித்த பதில் அந்தத் தாயை நெகிழ வைத்துள்ளது. “நீங்கள் டயப்பர் ஆர்டர் செய்திருப்பதால் உங்கள் வீட்டில் நிச்சயம் சிறிய குழந்தை இருக்கும்; ஒருவேளை காலிங் பெல் சத்தம் கேட்டால் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை விழித்துவிடக் கூடும் என்பதால் தான் நான் பெல் அடிக்கவில்லை” என்று மிகவும் முதிர்ச்சியோடு பதிலளித்துள்ளார்.
தாங்கள் பார்க்காத ஒரு குழந்தையைப் பற்றி கூட இவ்வளவு தூரம் சிந்திக்கும் குணம் எல்லாரோடும் இருப்பதில்லை என்பதால், அந்தத் தாய் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ‘DakshNMom’ என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், அந்த டெலிவரி ஊழியரின் பொறுப்பான மற்றும் கனிவான குணத்திற்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
