LATEST NEWS
“ஐயோ பாவமே..” பாலூட்டும்போது நடந்த விபரீதம்… ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தை… கதறும் பெற்றோர்..!!
டெல்லியிலிருந்து பீகாருக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது பெற்றோருடன் பயணித்த ஒன்பது மாத ஆண் குழந்தை, அவசரகால ஜன்னல் வழியாகத் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சீதாபுரி பகுதியில் வசிக்கும் மோகன் குமார், அவரது மனைவி காஜல் மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். ரயிலின் எஸ்-1 பெட்டியில் பயணித்தபோது, மோகன் கழிவறைக்குச் சென்ற சமயத்தில் காஜல் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்போது காஜல் எதிர்பாராதவிதமாக உறங்கிவிட்டதால், உத்தரப் பிரதேசத்தின் ஃபைசுல்லாபூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை தாயின் மடியிலிருந்து நழுவி அவசரகால ஜன்னல் வழியாகக் கீழே விழுந்துள்ளது.
குழந்தை தவறி விழுந்ததை உணர்ந்த மோகன், உடனடியாக ரயிலின் அவசரகால சங்கிலியை இழுக்க முயன்றுள்ளார். இருப்பினும், அப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளதால் உதவி கிடைப்பது கடினம் எனக் கூறி, சக பயணிகள் அவரைச் சங்கிலியை இழுக்க விடாமல் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் இத்தம்பதியினர் பிரயாக்ராஜ் சென்று ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகாரளித்தனர். அதனடிப்படையில் ஃபதேபூர் ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் கூட்டுக்குழுவினர் தண்டவாளப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடர்ந்த தாவரங்கள் மற்றும் நீர் தேக்கம் காரணமாகச் சிரமத்துடன் நடந்த இந்தத் தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சுமார் 23 மணி நேரத்திற்குப் பிறகு சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் குழந்தையின் உடல் புதர்களிலிருந்து மீட்கப்பட்டது.
குழந்தையின் உடல் மீட்கப்பட்ட போதிலும், பிரேதப் பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பெற்றோர் காவல் நிலையத்திலேயே இரவு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரின் துயரம் மேலும் அதிகரித்தது. ஆவணப்பணிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் நிதி குப்தா வாட்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, தாமதத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் பயணித்த நிலையில் இத்துயரம் நிகழ்ந்துள்ளதாகக் வேதனை தெரிவித்த அக்குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை டெல்லிக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
