LATEST NEWS
பாகிஸ்தானியருடன் பேசும் Uber ஓட்டுநர்… திடுக்கிட்ட பயணி..! ‘ஆப்’ பின்னணி தெரிந்ததும் கொடுத்த எச்சரிக்கை..!!
சுவாதி கோயல் சர்மா என்ற பெண் பயணி, ஓபர் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் தொலைபேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். உரையாடலின் இடையே அந்த ஓட்டுநர், “நீங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தானே?” என்று கேட்டதும், சந்தேகமடைந்த சுவாதி உடனடியாகத் தனது மொபைல் போன் மூலம் அந்த உரையாடலை ரகசியமாக வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார். பயணம் முழுவதும் ஓட்டுநர் பேசிய மத விவாதங்கள் அடங்கிய காட்சிகளைப் பதிவு செய்த பின், பயணம் முடிந்ததும் அவர் யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என நேரிடையாகக் கேட்டுள்ளார்.
சுவாதியின் கேள்விக்கு விடையளித்த ஓட்டுநர், தான் ‘Trumeet’ என்ற குரல் வழிச் அரட்டைச் செயலியின் குழு ஒன்றில் இணைந்திருப்பதாகக் கூறினார். அந்த செயலியில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் இணைந்து பல்வேறு தலைப்புகளில் பேசுவதாகவும், ஆனால் இறுதியில் விவாதம் எப்போதும் மத நம்பிக்கைகளைச் சுற்றியே அமைவதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், “இந்தியர்கள் ஏன் பசுவை தாயாகக் கருதுகிறார்கள்?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு விவாதத்தைத் தூண்டுவதாகவும், அதற்குத் தானும் மற்ற இந்தியர்களும் எதிர்ப்பும் பதிலடியும் கொடுத்து வருவதாகவும் கூறி, அதற்கான சான்றாக அந்தச் செயலியின் ஸ்கிரீன்ஷாட்டையும் சுவாதியிடம் காட்டினார்.
ஓட்டுநரின் விளக்கத்தைக் கேட்ட சுவாதி, இதுபோன்று அடையாளம் தெரியாத செயலிகள் வாயிலாகப் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்படும் தீவிரப் பிரச்சாரங்கள் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். இணைய வழியில் நடக்கும் இதுபோன்ற மத விவாதங்கள் மூலம் இந்திய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தீவிரவாத சிந்தனைகளுக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலர் இதுபோன்று நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் செயலிகள் மற்றும் ஆன்லைன் குழுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
