LATEST NEWS
படத்தை பார்த்து அழுறீங்களே.. நிஜத்துல ஒரு தாய் அழுகைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..? லாக்அப் மரணத்தால் அலறும் தூத்துக்குடி… கொந்தளித்த உதயநிதி..!!
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற வாலிபர், காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?” என அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், டாஸ்மாக் பார் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தபோது, தனக்கு நேர்ந்த கொடூர சித்திரவதைகள் குறித்து அருணாச்சலம் பேசிய வாக்குமூல வீடியோ வெளியாகி அனைவரின் நெஞ்சையும் பதற வைத்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பதே இத்தகைய அசம்பாவிதங்கள் தொடரக் காரணம்” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அரங்கத்தில் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள், மகனை இழந்து நிஜத்தில் கதறித் துடிக்கும் பெற்றோருக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையினரின் சித்திரவதையால் அடுத்தடுத்து இளைஞர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுவதாகத் தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சாடியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு நியாயமான நிவாரணமும் நீதியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
