LATEST NEWS
“உடனே பதவி எதிர்பார்க்காதீங்க.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன விஜய்.. ஷாக்கில் அதிமுக மாஜிக்கள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!”
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இதுவரை பதவிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால், அதிமுகவில் செல்வாக்குடன் திகழ்ந்த இத்தலைவர்கள் தவெகவில் சாதாரண உறுப்பினர்களைப் போல் செயல்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும், கட்சியின் கொள்கை முடிவுகளில் தங்களுக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் அதிருப்தி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், புதியதாகக் கட்சியில் இணையும் தலைவர்கள் உடனடியாக உயர்மட்டப் பொறுப்புகளை எதிர்பார்க்கக் கூடாது என்பதில் கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
உடனடியாகப் பதவிகளை வழங்குவதை விட, முதற்கட்டமாகக் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தகுந்த நேரத்தில் உரிய நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுகவிலிருந்து மேலும் பல நிர்வாகிகள் தவெகவை நோக்கி வரத் தயாராக உள்ள நிலையில், இந்த நிதானமான அணுகுமுறையை தலைமை கையாண்டு வருகிறது. இருப்பினும், இத்தகைய அதிருப்தி செய்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. புதிதாகக் கட்சியில் இணைந்த மூத்த தலைவர்களுக்கு என்ன விதமான பொறுப்புகள் வழங்கப்படும் மற்றும் தவெகவின் அடுத்தகட்ட நிர்வாக நியமனங்கள் எப்போது அறிவிக்கப்படும் என்பதே தற்போது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
