LATEST NEWS
கிரிக்கெட் மேட்ச் விளையாடிய சிறுவர்கள்.. அசால்ட்டாக கேட்ச் பிடித்து மிரட்டிய நாய்..! இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ..!!
கிரிக்கெட் விளையாட ஆசையிருந்தும் போதுமான ஆட்கள் இல்லாததால், சில சிறுவர்கள் தங்கள் நாய் நண்பர்களைத் தங்களது அணியில் சேர்த்துக் கொண்டு விளையாடிய சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலைப்பாங்கான, மேடு பள்ளங்கள் மற்றும் பாறைகள் நிறைந்த ஒரு மைதானத்தில் சிறுவர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் இந்த வீடியோ, ‘X’ தளத்தில் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றிலும் பசுமையும் பாறைகளும் நிறைந்த அந்த மைதானத்தில் பசுக்களும் உலவி வரும் நிலையில், இரண்டு நாய்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் போட்டியில் முக்கிய ஃபீல்டர்களாகச் செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
இந்த போட்டியில் ஒரு நாய் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு, தன் பக்கம் வரும் பந்தை மிகச் சுறுசுறுப்பாக வாயால் கவ்விப் பிடிக்கிறது. மற்றொரு நாய் மைதானத்தில் அங்குமிங்கும் ஓடி ஃபீல்டிங் செய்வதோடு, பந்து பாறைகளுக்கு இடையே தூரமாகச் சென்றாலும் அதைத் துரத்திச் சென்று மீண்டும் எடுத்து வருகிறது. குறிப்பாக, பேட்ஸ்மேன் அடித்த ஒரு பந்தை நாய் காற்றில் பறந்து கேட்ச் பிடிக்கும் காட்சி காண்போரைக் பரவசப்படுத்துகிறது. இதை எதிர்பாராத பேட்ஸ்மேனும் ஒரு கணம் ஆச்சரியமடைகிறார்; ஆனால் அந்த நாயோ இது தனக்கு மிகவும் சாதாரணமான ஒரு விஷயம் என்பது போல அசால்ட்டாக நடந்து செல்கிறது.
வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி விலைமதிப்பற்ற ஆடம்பரப் பொருட்களில் இல்லை, இதுபோன்ற சிறிய அழகிய தருணங்களில்தான் ஒளிந்துள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் “Premium Subscription of Life” என்ற தலைப்புடன் இந்த வீடியோ பரவி வருகிறது. இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரம் வெளியாகவில்லை என்றாலும், இணையத்தில் லட்சக்கணக்கான மக்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர். நாய்களின் வேகம் மற்றும் திறமையை மட்டுமன்றி, சிறுவர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள அன்பான பிணைப்பையும் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
