LATEST NEWS
பிள்ளை முக்கியமா..? மலை ஏறுறது முக்கியமா..? “பனிமலையில் தவித்த 7 வயது பிள்ளை” உச்சிக்குச் செல்ல பிள்ளையைப் பாதியில் விட்ட தந்தை… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
ஜப்பானின் புகழ்பெற்ற ஃபூஜிமலைப் பாதையில் ஏறியபோது சோர்வடைந்த 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகாயா பகுதியைச் சேர்ந்த 48 வயது தந்தை தன் இரு மகன்கள் மற்றும் நண்பருடன் ‘புஜினோமியா’ மலைப்பாதை வழியாகச் சென்றபோது இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் (8,169 அடி) உயரத்தில் உள்ள 6-வது முகாம் பகுதியில் சிறுவன் களைப்பாக இருப்பதாகக் கூறியதால், “நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு” எனக் கூறிவிட்டு தந்தை உச்சியை நோக்கிப் பயணித்துள்ளார்.
அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அந்த பனிமலையில் பலத்த மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவியுள்ளது. பனிப்பொழிவிலும் மழையிலும் அந்த 7 வயது சிறுவன் தனியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதை, அங்குள்ள ஒரு மலைக்குடிலின் ஊழியர் காலை 7:40 மணியளவில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாகச் சிறுவனை மீட்டு, குடிலுக்குள் அழைத்துச் சென்று தங்குமிடம் கொடுத்துப் பாதுகாத்ததோடு, உள்ளூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், மலையேற்றத்தில் இருந்த தந்தையைத் தொடர்பு கொண்டு எச்சரித்து, அவரைத் திரும்ப வரவழைத்துக் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். தனது அவசரப் போக்கால் தவறான முடிவை எடுத்துவிட்டதாகத் தந்தை வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது குழுவில் இருக்கும் நபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பயணிக்க வேண்டும்; ஒருவருக்குச் சோர்வு ஏற்பட்டால் ஒட்டுமொத்த குழுவும் பயணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று ஜப்பானியப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் முறையான மலையேற்ற விதியை அறிவுறுத்தியுள்ளனர்.
