LATEST NEWS
அய்யோ கடவுளே..! ஸ்கூட்டரைக் காப்பாற்ற போய் நடந்த விபரீதம்… மழையால் சறுக்கி பெட்ரோல் பங்கிற்குள் கவிழ்ந்து பாய்ந்த திருமண பஸ்… நொடியில் தவிர்க்கப்பட்ட பேராபத்து..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கக்கூரில், திருமண விழாவிற்குச் சென்ற பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த பஸ் பெட்ரோல் வழங்கும் எந்திரங்கள் மீது மோதாமல் தப்பியதால், மிகப்பெரிய வெடிப்பு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூத்தாட்டுக்குளம்-பிறவம் பிரதான சாலையில் நடந்த இந்த விபத்தின் போது பஸ்சில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட சுமார் 35 பயணிகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
பஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டி எந்தவித சிக்னலும் கொடுக்காமல், பின்புறம் பார்க்காமல் திடீரென வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர், ஸ்கூட்டர் மீது மோதாமல் அவரைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக பிரேக் அடித்து ஸ்டீயரிங்கை வலதுபுறமாகத் திருந்தியுள்ளார். அந்த நேரத்தில் மழை பெய்து சாலை ஈரமாக இருந்ததால் பஸ்ஸின் டயர்கள் சறுக்கி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உரசியபடியே அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் சென்றது.
இந்த விபத்தின் முழு காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்கின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பலமான சிமெண்ட் தடுப்பில் மோதி பஸ் நின்றதால், அங்கிருந்த காரும் மற்றொரு ஸ்கூட்டர் ஓட்டியும் நூலிழையில் தப்பினர். இந்த விபத்தில் 20 முதல் 35 பயணிகள் வரை காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு பஸ்சில் இருந்தவர்களை மீட்டு கூத்தாட்டுக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
