LATEST NEWS
“44 வயது மாப்பிள்ளைன்னா ரொம்ப வயசானவரு” வருஷம் 1 கோடி சம்பளம் வாங்கணும்… 40 வயது பெண்ணின் அதிரடி கண்டிஷன்… இணையத்தை புயலாய் தாக்கும் திருமண சர்ச்சை..!!
44 வயது வரனை ‘மிகவும் வயதானவர்’ என 40 வயது பெண் நிராகரித்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல மேட்ச்மேக்கர் ஓந்த்ரிலா கபூர் பகிர்ந்துள்ள இந்த உண்மைச் சம்பவத்தில், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 40 வயதுப் பெண் ஒருவர், தனக்கு வரும் வரன் 42 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். அண்மையில் தனக்கு வந்த 44 வயது வரனை, தங்களுக்குள் தலைமுறை இடைவெளி இருக்கும் என்று கூறி அவர் நிராகரித்ததே இந்த விவாதத்தின் மையப்புள்ளியாகும்.
நவீன திருமணச் சந்தையில் நிலவும் முரண்பாடுகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று மேட்ச்மேக்கர் ஓந்த்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக, 38 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்களை விட மிகவும் இளையவர்களான 35 வயதிற்குட்பட்ட பெண்களையே தேடுகிறார்கள். ஆனால், அந்த இளம்பெண்கள் தங்களை விட மூத்த வயதுடைய ஆண்களை விரும்புவதில்லை. இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டினாலும், அவர்கள் தேடும் நபர் இவர்களைத் தேடாமல் ஒரு வட்டத்திற்குள் ஒருவரையொருவர் துரத்தும் முடிவற்ற கதையாக இது முடிகிறது.
இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இரு பிரிவாகப் பிரிந்து தங்களது கருத்துக்களை மோதி வருகின்றனர். பெண்ணின் முடிவிற்கு ஆதரவளிப்பவர்கள், “ஆண்கள் வரன் தேடும்போது அதை ‘விருப்பம்’ என்றும், பெண்கள் தேடினால் அதை ‘பிடிவாதம்’ என்றும் கூறுவது என்ன நியாயம்? பொருளாதாரத் தற்சார்பு கொண்ட பெண்கள் சமரசம் செய்துகொள்வதற்குப் பதிலாகத் தனிமையாக வாழ்வதில் தவறில்லை” எனக் கூறுகின்றனர். அதே நேரத்தில், வயது என்பது வெறும் வடிகட்டி மட்டுமல்ல, அது வாய்ப்புகளைக் குறைக்கும் ஒரு பிடிவாதமா என்பதைத் தேடுபவர்கள் சிந்திக்க வேண்டும் என்ற மாற்றுக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
