LATEST NEWS
“பெண்களை விட பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை…!” டெல்லியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..! பாஜக அரசு மீது மெகபூபா முப்தி கடுமையான விமர்சனம்..!!
டெல்லியில் 16 வயது பள்ளி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுவதாகவும், ஆனால் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதுடன் முழுமையான ஆதரவையும் பெறுவதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்றும் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.
