LATEST NEWS
“கோழைகளே… தேர்தலில் திருப்பி அடிப்போம்”.. ஒன்றிய அரசுக்கு ஆடுகளம் கிஷோர் வைத்த நெத்தியடி செக்.. கொதிக்கும் அரசியல் களம்..!!
நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த ஜூன் 20 முதல் டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணி சென்ற இளைஞர்கள் மீது காவல் துறையினரும், மத்திய படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து பல்வேறு இடங்களில் ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ஆடுகளம் கிஷோர், டெல்லி இளைஞர்களுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அகிம்சையை வலியுறுத்தி அறவழியில் போராடும் இளைஞர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ள கிஷோர், திருப்பித் தாக்காமல் அடி வாங்குவதற்கே மிகப்பெரிய தைரியம் வேண்டும் என்றும், வன்முறையைக் கையிலெடுக்கும் காவல்துறையினரும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுமே கோழைகள் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், மாணவர்கள் மீது ஏவப்பட்டுள்ள இந்தக் கொடூரத் தாக்குதலானது, பிரதமர் மோடி தான் ஒரு ‘மனிதப் பிறவி அல்ல’ என்று கூறியதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாகச் சாடியுள்ளார். சிறிதளவாவது மனிதநேயம் கொண்ட எவரும் இப்படி ஒரு தாக்குதலுக்கு உத்தரவிட மாட்டார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
காந்தி படுகொலை முதல் கௌரி லங்கேஷ் கொலை வரை வன்முறையை வரலாறாகக் கொண்ட இந்த அரசிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ள கிஷோர், அரசின் ஆதரவு ஊடகங்களும் ஐடி விங்குகளும் பிஞ்சுக் குழந்தைகளை ‘தேசத்துரோகிகள்’ எனச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலில் இரும்பு முள் லத்திகளால் தாக்குதல் நடப்பதாகவும், ஒரு கல்வி அமைச்சர் பதவி விலகுவதால் மட்டும் இந்த ஊழல் நிறைந்த கல்வி அமைப்பு மாறிவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டுமொத்த அமைப்பையும் சீரமைக்க ஒரு பெரிய அரசியல் மாற்றம் தேவை என்பதால், சாதி, மதங்களைக் கடந்து, இந்த அரசின் ஒவ்வொரு அநீதிக்கும் வரும் தேர்தலில் பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
