CRIME
“என்னாச்சு போன் பண்ணியும் எடுக்கல” பள்ளிக்கு வராத ஆசிரியையால் சந்தேகம்.. பூட்டிய வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது காத்திருந்த கொடூரம்… உறைந்துபோன காவல்துறை..!!
பீகார் மாநிலம் பாட்னாவின் மசௌரி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில், பள்ளி ஆசிரியை ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் போத்ஹி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த லட்சுமி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் அவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
லட்சுமி தேவி புதன்கிழமை பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த பள்ளித் தலைமை ஆசிரியர், அவரது மொபைல் போனுக்குத் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்காததால் இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உறவினர்கள் கைலூ பிகா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, லட்சுமி தேவி படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மசௌரி எஸ்டிபிஓ ராகவ் தயாள் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரமான கொலைச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீஸ் தரப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
