CRIME
காலையிலேயே நடுநடுங்கிப்போன தமிழகம்..! அரசுப்பள்ளி மாணவனுக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை.. 9 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து செய்த கொடூரம்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனுக்கு அதே பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள் சேர்ந்து கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரமான செயலை வெளியில் யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்த மாணவர்கள் மிரட்டியதால், பயத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவன் நீண்ட நாட்களாக இதனைத் தன் மனதிற்குள்ளேயே மறைத்துத் தவித்துள்ளான்.
இதன் காரணமாக அந்த மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததை கவனித்த பள்ளி ஆசிரியர், உடனடியாக அவனது பெற்றோரை அழைத்து விபரத்தைக் கூறியுள்ளார். பள்ளித் தரப்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்துக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட போதிலும், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த ஆண்டிலிருந்தே அந்த 9 மாணவர்களும் திட்டமிட்டு சக மாணவனைத் துன்புறுத்தியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் 9 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
