CINEMA
“ஏர்போர்ட்ல திடீர்னு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… ஐதராபாத் செல்ல வந்த பிரபல நடிகை லதா ராவுக்கு நேர்ந்த சங்கடம்…” இணையத்தில் வைரலான வீடியோவால் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய அதிரடி ஆக்ஷன்..!!
சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது அவருக்கு எதிர்பாராத விதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. கழிவறைகளில் இருந்த தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் செயல்பாட்டில் இல்லாததால், முனையத்தின் மற்றொரு முனையில் உள்ள மருந்தகத்திற்கு சென்று நாப்கின் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டு, விமானத்தில் ஏறுவதற்கே தாமதமாகும் நிலை உருவானது. இந்த அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியது.
நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பெண் பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய தற்காலிக ஏற்பாடாக, பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணை அழைத்தால், அடுத்த 2 நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரடியாக வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக ஏற்பாட்டைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் துணிச்சலாக எழுப்பிய புகாருக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
