LATEST NEWS
“அம்மா நான் ஜெயில்ல இருக்கேன்” சினிமா கதையையே மிஞ்சிய பயங்கரம்.. இறுதிச்சடங்கு முடிந்த 15 நாட்களுக்குப் பின் பெற்றோருக்கு வந்த ‘மரண’ போன் கால்.. கிளைமாக்சில் செம டுவிஸ்ட்…!!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா பகுதியைச் சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞர் இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அவர் சிறையில் உயிருடன் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 அன்று வீட்டை விட்டு வெளியேறிய ரவி குமார் மீண்டும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, எரிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தகவல் அளித்ததை அடுத்து, உடலைப் பார்த்த பெற்றோர் அது தங்கள் மகன்தான் எனத் தவறாக அடையாளம் காட்டி, ஆகஸ்ட் 13 அன்று முறைப்படி தகனம் செய்து இறுதிச் சடங்குகளை முடித்தனர்.
மகன் இறந்துவிட்ட சோகத்தில் குடும்பத்தினர் மூழ்கியிருந்த நிலையில், செப்டம்பர் 2 அன்று கபூர்தலா மத்திய சிறை ஊழியரிடமிருந்து பெற்றோருக்கு ஒரு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வந்தது. ரவி குமார் என்ற நபர் தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் தெரிவித்த தகவலால் பெற்றோர் கடும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். முன்னதாக, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததாகக் கூறி ஜலந்தர் காவல்துறையினரால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை அடுத்து, மறுநாளே சிறைக்கு நேரில் சென்ற பெற்றோர், அங்கு தங்களது மகன் ரவி குமார் உயிருடன் இருப்பதை நேரில் கண்டு அளவற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர். அதே நேரத்தில், ரவி குமார் என நினைத்து அவரது குடும்பத்தினர் யாருடைய உடலைத் தகனம் செய்தார்கள் என்ற புதிய விடை தெரியாத கேள்வி தற்போது எழுந்துள்ளது. தவறாக அடையாளம் காணப்பட்டு எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத சடலம் யாருடையது என்பது குறித்தும், அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
