CRIME
“அடப்பாவிகளா… யாரைத்தான் நம்புறதோ தெரியல…” படுக்கையறை வரை விட்ட முதலாளி… கடைசியில் ரூ.1.5 கோடி ஆப்பு வைத்த சமையல்கார தம்பதி..!!
பீகார் பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகிய தம்பதியினர் கடந்த 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர். பல ஆண்டுகள் வேலையில் இருந்ததால், வீட்டின் உரிமையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு அந்த வீட்டில் உள்ள படுக்கையறை வரை தடையின்றி செல்லும் அதிகாரம் கிடைத்துள்ளது.
இந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக் கொண்ட சமையல் தம்பதியினர், தங்களது சொந்த ஊரான லக்னோவிற்கு செல்லும் போதெல்லாம் உரிமையாளரின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்களைச் சிறுகச் சிறுக திருடிச் சென்றுள்ளனர். மேலும், அந்த திருட்டுப் பொருட்களை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தை தங்களின் சொந்த வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 12 அன்று வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சமையல் வேலை பார்த்த ஜிதேந்திரா மற்றும் விபா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், பீகாரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த விபா தேவியை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து 55.4 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களும், ரூ.25,000 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட விபாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருடப்பட்ட நகைகளுடனும் பணத்துடனும் தொடர்புடையவை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள விபாவின் கணவர் ஜிதேந்திராவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
