LATEST NEWS
“இது உங்க உள்நாட்டு பிரச்சனை…” தொழுகை நேரத்தில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்… பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் கொடுத்த பகீர் பதிலடி..!!
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வோ மாகாணத்தில், பழைய காவல்துறை வளாகத்திற்கு அருகே உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்துகொண்டிருந்தபோது திடீரென வெடி சத்தம் கேட்டு, மசூதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தாஹிர் அலி ஷா தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாகக் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாத வன்முறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புப் படைகளும் காவல்துறையினரும் பயங்கரவாதிகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடங்களைப் பயன்படுத்திப் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தாக்குதல்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், பாகிஸ்தானில் நிலவும் தீவிரவாதத்தை அவர்களின் ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளது.
