LATEST NEWS
உன்ன விட மாட்டேன்டி..! “அந்த ஒரு வார்த்தை தான்” சுனாமியில் மறைந்த மனைவியின் கடைசி மெசேஜ்… 13 ஆண்டுகளாக 650 முறை கடலில் மூழ்கித் தேடும் கணவன்..!!
ஜப்பானைச் சேர்ந்த யாசுவோ டகாமட்சு (67) என்ற ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுநர், கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின்போது காணாமல் போன தனது அன்பு மனைவி யுகோவைத் தேடி, கடந்த 13 ஆண்டுகளில் 650க்கும் மேற்பட்ட முறை கடலுக்குள் மூழ்கித் தேடி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மியாகி மாகாணத்தின் ஓனகாவா கடலோரப் பகுதியில் வசித்து வந்த இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2011 மார்ச் 11 அன்று ஜப்பானைத் தாக்கிய 9.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, டகாமட்சுவின் பிள்ளைகள் பள்ளியில் இருந்ததால் உயிர் பிழைத்தனர். ஆனால், அங்குள்ள ஒரு வங்கிக் கிளையின் இரண்டு மாடி கட்டிடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரது மனைவி யுகோ, 15 மீட்டருக்கும் மேல் எழும்பிய பிரம்மாண்ட சுனாமி பேரலையில் சிக்கிக் கொண்டார். அந்தப் பேரலை வங்கியின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்திருந்த 12 ஊழியர்களை அடித்துச் சென்றது, அதில் யுகோ உட்பட 8 பேர் முற்றிலும் காணாமல் போனார்கள்.
சுனாமி தாக்கிய அந்த இக்கட்டான தருணத்தில், யுகோ தனது கணவருக்கு இறுதியாக, “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? நான் வீட்டிற்கு வர விரும்புகிறேன்” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்ட அவரது கைபேசியில், “சுனாமி மிகவும் பெரியதாக உள்ளது” என்று அவர் அனுப்ப முயன்று தோல்வியுற்ற மற்றொரு செய்தியையும் டகாமட்சு கண்டறிந்தார். தன் மனைவியின் கடைசி ஆசையான ‘வீட்டிற்கு வர வேண்டும்’ என்ற வார்த்தைகள் டகாமட்சுவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மனைவியின் உடலையாவது வீட்டிற்கு மீட்டு வர வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், டகாமட்சு தனது ஓய்வு நேரத்தில் ஆழ்கடல் நீச்சல் கற்றுக்கொண்டார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் கடந்த நிலையிலும், அவர் தொடர்ந்து கடலுக்குள் சென்று தன் மனைவியின் உடலின் ஒரு பகுதியையாவது தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜப்பானின் மிக மோசமான அந்த இயற்கை பேரிடரில் 19,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இன்னும் 2,553 பேர் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
