CRIME
“என் பொண்டாட்டி தான் அப்பாவை கொன்னுட்டா..!” மருத்துவமனையில் நாடகமாடிய கணவன்.. போலீசார் விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (60) என்பவர், மது போதையில் மருமகளைத் தாக்க முயன்ற தனது மகன் முத்தையாவை (30) தடுத்துக் கண்டித்ததால், மகனாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏசி மெக்கானிக்கான முத்தையாவிற்கும் அவரது மனைவி நந்தினிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நந்தினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். அண்மையில் அவர்களை முத்தையா சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் மது போதையில் மனைவியுடன் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன நந்தினி அங்கிருந்து தப்பியோட, இதனைத் தட்டிக்கேட்ட தந்தை பெருமாளை, முத்தையா கீழே கிடந்த கட்டையை எடுத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பெருமாள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை இறந்ததைத் தொடர்ந்து, தவற்றிலிருந்து தப்பிப்பதற்காக முத்தையா மருத்துவமனை ஊழியர்களிடம், “என் பொண்டாட்டி தான் அப்பாவை கட்டையால் அடித்துக் கொன்னுட்டா” எனத் தன் மனைவி மீது பழியைப் போட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய வடமதுரை போலீசார், மது போதையில் முத்தையாவே தன் தந்தையைக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததை அம்பலப்படுத்தினர். இதையடுத்து முத்தையா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
