CRIME
நீதித்துறை வரலாற்றில் முதல்முறை..! “உன்னைச் சிதைத்த மாமா சிறையிலேயே சாகணும்” தைரியமாக புகாரளித்த சிறுமிக்கு கடிதம் எழுதிய நீதிபதி… நெஞ்சை உலுக்கும் தீர்ப்பு..!!
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான ஒரு வழக்கின் தீர்ப்பில், பாதிக்கப்பட்ட 10 வயதுச் சிறுமிக்கு டெல்லி நீதிமன்ற நீதிபதி உணர்வுபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ள அரிய சம்பவம் நீதித்துறை வரலாற்றில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, சிறுமிக்கு 7 வயதாக இருந்தபோது அவரது சொந்த மாமாவால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகத் தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளியை அடையாளம்காட்டி சிறுமி அளித்த புகாரை ஏற்று, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, “என்னைத் துன்புறுத்திய மாமா வயதாகி தாத்தாவாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்” என்று அச்சிறுமி நீதிமன்றத்தில் மழலை மாறாமல் தனது கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதைக் குறிப்பிட்டே டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரஜினி ரங்கா தனது தீர்ப்புரையில் அந்தப் பெண்ணுக்கு பிரத்யேகமாக உருக்கமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “உனது துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் கொள்ளும். உன்னை பாலியல் வன்கொடுமை செய்த உனது மாமா சிறையிலிருந்து ஒருபோதும் வெளிவர முடியாது; அவர் அந்த கூண்டிலேயே வயதாகி, சிறையிலேயேதான் சாக வேண்டும்” எனத் தெரிவித்து சிறுமியின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார். மேலும், இழந்த உனது குழந்தைப்பருவத்தை நீதிமன்றத்தால் மீட்டுத்தர முடியாது என்றாலும், அச்சமின்றி இனி பள்ளிக்குச் சென்று, விளையாடி உனது கனவுகளை நனவாக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் மற்றும் தினேஷ் குமார் சர்மா அடங்கிய அமர்வு விசாரணை நீதிமன்ற நீதிபதி சிறுமிக்கு எழுதிய கடிதத்தை “துணிச்சலின் செய்தி” என வெகுவாகப் பாராட்டியுள்ளனர். மேலும், இந்த ஊக்கமளிக்கும் கடிதத்தை அச்சிட்டு, நீதிமன்றம் அறிவித்துள்ள ரூ. 10.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து இரண்டு வாரங்களுக்குள் அந்தச் சிறுமியிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
