LATEST NEWS
“அடக்கொடுமையே.. 4 மணி நேரத்துக்கு முன்னாடியே போயும் துபாய் ஃபிளைட்டை மிஸ் பண்ணிய நபர்…! காரணம் தெரிஞ்சா சிரிச்சுடுவீங்க… இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பூஷன் குமார் என்ற நபர், வாரணாசியிலிருந்து துபாய் செல்லவிருந்த தனது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தவறவிட்டுள்ளார். இரவு 9:05 மணிக்கு புறப்படவிருந்த அந்த விமானத்திற்காக, அவர் மாலை 5:30 மணிக்கே லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். ஆனால், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், அவர் விமான நிலையத்தின் முனையத்திற்குச் செல்லாமல் பார்க்கிங் பகுதிக்குச் சென்று அங்கு தூங்கிவிட்டார்.
பார்க்கிங் பகுதியில் பூஷன் குமார் நீண்ட நேரமாகப் படுத்துக் கிடப்பதைக் கண்ட விமான நிலையப் பாதுகாப்புப் படையினர், அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அந்த விமானம் புறப்படுவதற்கான நேரம் கடந்துவிட்டது. இதனால், குறித்த நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்தடைந்தும் அவரால் துபாய் செல்லும் விமானத்தில் ஏற முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பூஷன் குமாரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். விமான நிலையத்தில் அவருடைய குடும்பத்தினர் யாரும் உடன் இல்லாததால், கோரக்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் காவல்துறை தெரியப்படுத்தியது. இதனால் அவரது துபாய் பயணம் தள்ளிப்போனதுடன், விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வந்தாலும் முறையான ‘செக்-இன்’ மற்றும் ‘போர்டிங்’ நடைமுறைகளைச் செய்யாவிட்டால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.
