LATEST NEWS
“டிராக்டர் ஓட்டக்கூட தெரியாது.. வயிற்றெரிச்சல்ல பேசுறாங்க…!” விமர்சனங்களுக்கு ஆதவ் அர்ஜூனா மரண மாஸ் பதிலடி..!!
மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, “தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் ஊர்களுக்குச் செல்லவில்லை, பயந்துவிட்டார்” என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுத்தார். தேர்தலுக்கு முன் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று விமர்சித்த அதே கும்பல், இப்போது அவர் 42 கி.மீ. ரோடு ஷோ நடத்தி, கிராமங்களுக்குச் சென்று, டீக்கடைக்கும் விவசாயிகளுக்கும் இடையே சென்று டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்து வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்றும், எதிர்க்கட்சியினருக்கு டிராக்டர் ஏறவோ ஓட்டவோ தெரியாது என்றும் கூறினார். மேலும், 42 கட்சிகள் ஒரு பக்கம் இருக்க, தனியாக நின்ற நாங்கள் பயப்படவே இல்லை என்றும், 75 வருட பாரம்பரியம் கொண்ட திமுக, 25 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தொகுதிக்கு 40 கோடி ரூபாய் வரை செலவு செய்து 15 அமைச்சர்கள் தோல்வியடைந்த பிறகும் நம்மைப் பார்த்து பயந்துட்டீங்களா எனக் கேட்பதாகச் சாடினார்.
மதுரை மாநாட்டிற்குப் பிறகு 234 தொகுதிகளுக்கும் செல்ல நினைத்ததாகவும், ஆனால் பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். திமுக தலைவர் ரோடு ஷோ சென்றால் 2 மணி நேரத்தில் முடிந்துவிடும், அதற்கு மேல் மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும், நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 10 ஏக்கர் நிலத்தில் பிரசாரம் திட்டமிட்டு சமூக வலைத்தளங்கள் மூலம் 5 கோடி மக்களைச் சென்றடைந்தோம் என்றும் குறிப்பிட்டார். காவல்துறையின் அனுமதியைக் காரணம் காட்டித் திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கான பிரசாரத் திட்டங்களை ரத்து செய்ய வைத்ததில் திமுகவின் சூழ்ச்சி இருந்தது என்றும், தற்போது நமது அண்ணன் முதலமைச்சராக இருப்பதால் அதே ரூட் மேப்பில் தங்கு தடையின்றி பிரசாரம் செய்ய முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கரூரில் 10 ஆயிரம் பேர் நிற்க வேண்டிய இடத்தில் 30 ஆயிரம் பேர் கூடியதால் பிரச்சனை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுராந்தகத்தில் 42 கி.மீ. தூரத்திற்கு 42 இடங்களில் மக்கள் பரவலாக நிற்கும் வகையில் முன்னதாகவே திட்டமிட்டு அமைதியாக நடத்தி முடித்துக் காட்டியுள்ளோம் எனக் கூறினார். தேர்தலில் சிறிய சாலைகள் வழியாக விஜய் சென்று மக்களைப் பார்த்தால் ஆதரவு பெருகிவிடும் என்பதால், அவரை வெளியிலேயே வரவிடாமல் வீட்டி்ல் உட்கார வைக்க அநியாய அரசியல் செய்தார்கள் என்றும், ஆனால் நேற்று மு.க.ஸ்டாலின் தாராபுரம் பிரசாரத்திற்குச் சென்றபோது யாரும் தடுக்கவில்லை என்பதே அண்ணனின் நியாயமான ஆட்சிக்குச் சான்று என்றும் கூறினார். வருகிற 9-ந்தேதி மாலை 3 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வரும்போது, பெண்களும் இளைஞர்களும் திரும்பவும் முகத்தில் ஓங்கி அறையும் வகையில் ஒரு முடிவைக் கொடுப்பார்கள், அப்போது யார் யாரைப் பார்த்து பயந்தார்கள் என்பது தெரியவரும் என்றும் பேசி முடித்தார்.
