CRIME
“விளையாட்டு வினையானது..!” ரத்தவெள்ளத்தில் சரிந்த 13 வயது சிறுவன்.. தள்ளிவிட்டதால் ஆத்திரமடைந்து 15 வயது சிறுவன் செய்த பகீர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் செக்டர் 56 பகுதியில் உள்ள ஆஷியானா அடுக்குமாடிக் குடியிருப்பில், விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் 15 வயது சிறுவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பூர்வீகமாக உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த யாமில் என்ற பழைய இரும்பு வியாபாரியின் மகனான கண்ணு என்ற அந்த சிறுவன், ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில், தனது வீட்டின் வெளியே நின்று தனது 1 வயது தங்கை சஹத்திற்கு உணவூட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த பக்கத்து பிளாக்கைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.
விளையாடிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே திடீரென தள்ளிவிட்டது தொடர்பாகக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் கண்ணுவின் மார்பில் பலமாகக் குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனின் மாமா இக்பாலுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணுவை மீட்டு ஃபரிதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு கண்ணுவின் மூத்த சகோதரன் ஆமிருக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்தத் துயர சம்பவம் அந்தக் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து செக்டர் 58 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பு முறை, அவர்களின் மனநிலை மற்றும் அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இந்த விபரீதம் குறித்து காவல்துறை அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.
