LATEST NEWS
“தவெக வெற்றிக்கு நாங்க காரணம் இல்லையா..?” விசிகவை வெளியேற்ற நடக்கும் சதி..! வெளிப்படையாக போட்டுடைத்த திருமாவளவன்..!!
”தவெக வெற்றிக்கு விசிக காரணம் இல்லை; பாமக தான் காரணம் என்ற கதையை கட்டமைக்கின்றனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது விசிகவை தவெக கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பது தான்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் விசிகவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மனசாட்சியுள்ள அனைவரும் அறிவர். ஆனால், இதுகுறித்து விவாதிப்பவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விசிகவின் முக்கியத்துவத்தை மறைக்க முயற்சிக்கின்றனர். முதலிடத்தில் இருந்த அதிமுக 03-வது இடத்துக்கு சென்றுள்ளது அதைக் குறித்துக்கூட பேசாதவர்கள், தவெக வெற்றிக்கு விசிக காரணம் இல்லை, பாமகதான் காரணம் என்ற கதையைக் கட்டமைக்கின்றனர். திமுக கூட்டணியில் இருந்தபோதும் இதே முயற்சிகளைச் செய்தவர்கள், தற்போதும் அதையே கையாளுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் வாக்குகள் எப்படி திமுகவுக்கு வராதோ, அதேபோல விசிக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு பாமகவின் வாக்குகள் கிடைக்காது. தவெகவுக்கு பாமக ஆதரவு அளிக்கப்போகிறது, தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெறப்போகிறது எனப் பரப்பினர். இப்படி ஒரு ஆசையைத் தூண்டுவதன் மூலம் பாமகவின் வாக்குகள் திமுகவுக்குச் செல்லாமல் கணிசமான வாக்குகள் தவெகவுக்குச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், விசிகவினரை சோர்வடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவதாகத் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
