CINEMA
“சந்தோஷமா போயிட்டு வா தாயி” விவாகரத்தான சில நாட்களிலேயே.. முன்னாள் மனைவிக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்த ‘ஸ்பைடர்மேன்’ நடிகர்..!!
ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற டோபி மாகுவேர் , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கு முன்னின்று மறுமணம் செய்து வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டோபியும் அவரது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம்தான் இவர்களது விவாகரத்து அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. விவாகரத்து பெற்ற சில நாட்களிலேயே, பிரபல இசை நிறுவன உரிமையாளரான பெரும் கோடீஸ்வரர் ஜெஃப்ரி ஒகுன்லேசிக்கும் ஜெனிஃபருக்கும் ஹவாயில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.
விவாகரத்திற்குப் பின்னரும் டோபி மற்றும் ஜெனிஃபர் ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். தனது முன்னாள் மனைவியின் புதிய வாழ்க்கையை வாழ்த்தி, அவரே நேரில் நின்று இந்தத் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உலக அளவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல ஹாலிவுட் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்ட இந்தத் திருமணத்தில், மணமக்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
