LATEST NEWS
அடேங்கப்பா..! 20 கோடி வருட பழமையான ‘புதையலை’ தேடிப்பிடித்த குட்டி விஞ்ஞானி.. 6 வயது சிறுவனின் மிரட்டலான சாதனை..!!
குழந்தைகளின் மனம் மிகவும் ஆர்வம் நிரம்பியது. சில சமயங்களில் அவர்கள் செய்யும் அற்புதங்களை பெரியவர்களாலும் நம்ப முடியாது. அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஸ்ட்ராம் பார்க் ஸ்டேட் பொழுதுபோக்குப் பகுதியில் தனது குடும்பத்தினருடன் ‘ரிப்டிங் அண்ட் ராக்ஸ்’ நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற 6 வயது சிறுவன் லியோ யங்டால், பார்க் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கல்லைக் கவிழ்த்துப் பார்த்தான். அதன் கீழே பாம்பு போன்ற விசித்திரமான வடிவம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவன், உடனே அந்தப் பாறைத் துண்டைப் பூங்காவின் கல்வி நிபுணரிடம் கொண்டு சென்றான். விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்தபோது, அது ஒரு மாமத்தின் எலும்பை விட மிகவும் அரிதான தொல்லுயிர் எச்சம் என்பது தெரியவந்தது.
அவுட்டோர் நெப்ராஸ்காவின் தகவல்படி, நடத்தப்பட்ட சோதனைகளில் அது ‘கோனுலாரிட்’ எனப்படும் மிகவும் பழமையான கடல்வாழ் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சம் என்பது கண்டறியப்பட்டது. இந்த உயிரினம் சுமார் 20 கோடி முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்ததாகும். இது தலைகீழான பிரமிடு போன்ற அமைப்பைக் கொண்ட ஜெல்லிமீன் போன்ற ஒரு உயிரினமாகும். இந்த உயிரினங்களின் உடல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் உருவாவது மிகவும் கடினமான செயலாகும். இதன் காரணமாகவே இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகின்றது. நெப்ராஸ்காவில் கடந்த 55 ஆண்டுகளில் இதுபோன்ற தொல்லுயிர் எச்சம் ஒரு முறை கூடக் கண்டெடுக்கப்படவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அரிய கண்டுபிடிப்பிற்குப் பிறகு லியோ மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளான். விதிகளின்படி அவனால் இந்தத் தொல்லுயிர் எச்சத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது என்றாலும், அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. இந்த அரிய எச்சம் இப்போது ஸ்ட்ராம் கல்வி மையத்திலேயே பாதுகாக்கப்பட்டு, குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கும் விளக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த 6 வயது சிறுவனின் புத்தி கூர்மை மற்றும் தேடல் ஆர்வத்தைப் பற்றிய பேச்சுக்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
