CRIME
கார் வாங்க பணம் தராத தந்தை… டைல்ஸ் அறுக்கும் எலக்ட்ரானிக் கிரைண்டரால் கழுத்தை அறுத்த பெற்ற மகன்.. நேரில் சென்று பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் கிழக்கில் உள்ள நவ்லி ராம்நகர் பகுதியில், கார் வாங்குவதற்குப் பணம் தராத காரணத்தால் 59 வயது தந்தையை 25 வயது மகன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் மும்பையின் தாதர் பகுதியில் பாத்திர வியாபாரம் செய்து வந்த மோகன்லால் பர்மர் (59) என்பதும், அவரது மகன் முகேஷ் பர்மர் (25) என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி இவர்களது குடியிருப்பு பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மோகன்லாலின் மனைவி சொந்த ஊரான ராஜஸ்தானுக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தந்தையும் மகனும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது புதிய கார் வாங்குவதற்காகத் தந்தையிடம் முகேஷ் பணம் கேட்டுள்ளார். இதற்குத் தந்தை மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் முகேஷ் தனது தந்தையைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
கொலைக்குப் பிறகு முகேஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மோகன்லாலைத் தொடர்புகொள்ள முடியாத உறவினர்கள் வீட்டிற்குச் சென்று சோதித்தபோதுதான் இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து பால்கர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார் சில மணி நேரங்களிலேயே குஜராத் மாநிலம் பரூச் (Bharuch) பகுதியில் தலைமறைவாக இருந்த முகேஷ் பர்மரை கைது செய்தனர்.
