CRIME
“டிரெஸ்ஸை கழட்டுங்க” 4 மணி நேரம் அறையில் பூட்டி வைத்து ஆசிரியை செய்த காரியம்… நவராத்திரி சடங்குக்கு வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரின் எம்.ஐ.ஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷெனாய் ரெசிடென்சி பகுதியில், நவராத்திரி வழிபாட்டின் ஒரு பகுதியான ‘கன்யா போஜ்’ (சிறுமிகளுக்கு உணவளிக்கும் சடங்கு) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஏழு சிறுமிகள் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியையான அனிதா மேத்தா என்பவர், தனது வீட்டிற்கு வந்த சிறுமிகள் மீது திடீரென பணம் திருடியதாகப் பழி சுமத்தியுள்ளார். சிறுமிகள் தாங்கள் திருடவில்லை என்று மறுத்தபோதிலும், ஆசிரியை அதனை ஏற்காமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில், திருட்டுப் புகார் என்ற பெயரில் அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை, சிறுமிகளின் ஆடைகளைக் களையச் சொல்லித் தீவிர சோதனை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அச்சிறுமிகளை சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு அறைக்குள் பூட்டி வைத்துப் பழிவாங்கியுள்ளார். அறைக்குள்ளிருந்து சிறுமிகள் சத்தமிட்டு வெளியேற முயன்றபோது, அவர்களைக் கொலை செய்துவிடுவதாகவும் ஆசிரியை அனிதா மிரட்டியதாகச் சிறுமிகள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிறுமிகளின் பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தனர். பெற்றோர் மற்றும் சிறுமிகளின் புகாரைப் பெற்றுக்கொண்ட எம்.ஐ.ஜி காவல் நிலைய ஆய்வாளர் சி.பி.சிங், ஓய்வு பெற்ற ஆசிரியை அனிதா மேத்தா மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியையை விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
