LATEST NEWS
டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்..! கூண்டோடு கலைக்கப்படுகிறது தமிழக பாஜக..? மோடி – அமித்ஷா அதிரடி ஆக்சன்..!!
தமிழக பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு ரீதியான பலவீனங்கள் குறித்து அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்த ரகசிய அறிக்கை டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி இந்த விரிவான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழக பாஜக தலைமை கூண்டோடு கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது ஓரளவுக்குச் செயல்பட்ட கட்சி, அவர் விலகிய பிறகு முற்றிலுமாக முடங்கிவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக நிர்வாகிகள் யாரும் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடவில்லை என்றும், தங்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியைத் தக்கவைக்கக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யாமல், முழுக்க முழுக்க ஊடக விளம்பரங்களை மட்டுமே நம்பி தங்களைப் பிரபலமானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியான பலவீனங்கள் மட்டுமின்றி, கட்சி நிதியைக் கையாள்வதில் முறைகேடு, பிரதமரின் வருகையின்போது வரவேற்புப் பட்டியலில் இடம் பெறப் பணம் வாங்கியது மற்றும் மத்திய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திச் சென்னை துறைமுகத்தில் வசூல் வேட்டையில் ஈடுபட்டது போன்ற புகார்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தற்போதைய நிர்வாகிகள் யாருடைய தலையீடும் எதிர்காலத்தில் இருக்கக் கூடாது என ராம் மாதவ் பரிந்துரைத்துள்ளார். இதற்கிடையே, மத்திய இணையமைச்சர் பதவியை எல். முருகன் ராஜினாமா செய்துள்ளதால், வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களுக்கு முன்பாக அவரிடம் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.
