DISTRICT NEWS
“திக் திக் திக்… நெஞ்சை பதறவைக்கும் விநாடிகள்..” காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகன்.. உயிரை கொடுத்து மீட்ட துணிச்சலான இளைஞர்கள்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், கான்சாபுரம் பகுதியில் உள்ள அத்திக்கோவில் ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த சமயத்தில், அங்குள்ள புகழ்பெற்ற கருப்பசாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்த தாயும் அவரது மகனும், எதிர்பாராத விதமாக ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் விநாடிக்கு விநாடி உயர்ந்ததால், அவர்களால் கரை திரும்ப முடியாமல் பரிதாபமாகத் தத்தளித்தனர்.
இதைக் கண்ட அப்பகுதி உள்ளூர் இளைஞர்கள் சற்றும் தாமதிக்காமல், தங்களது உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக வெள்ளத்தில் இறங்கினர். ஆபத்தான சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் போராடி, வெள்ளத்தில் சிக்கித் தவித்த தாய் மற்றும் மகனை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இவர்களின் இந்த வீரமான செயலால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.
