LATEST NEWS
முயல் வேட்டைக்குச் சென்றபோது காத்திருந்த மரணம்… துடிதுடித்து இறந்த கூலித்தொழிலாளி… போலீசுக்கு பயந்து உடலை ஏரியில் வீசிய கொடூரம்..!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், போலீசார் பயந்து அவரது உடலை ஏரியில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (37) என்ற கூலி தொழிலாளி, மேல்சிவிரி கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்திற்கு முயல் மற்றும் நண்டுகளைப் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிரைக் காப்பதற்காக அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அவர் கவனிக்காமல் மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த விளைநிலத்தைப் பராமரித்து வந்த மேல்சிவிரியைச் சேர்ந்த சங்கர் (56) என்பவர், காலையில் வயலுக்கு வந்தபோது மின்வேலியில் சிக்கி பச்சையப்பன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்த சங்கர், யாருக்கும் தெரியாமல் பச்சையப்பனின் உடலை எடுத்துச் சென்று சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆத்திபாக்கம் கிராம ஏரியில் வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதற்கிடையே ஏரியில் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய தீவிர விசாரணையில், மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானதும், அவரது உடலைச் சங்கர் ஏரியில் வீசியதும் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் அழகேசன் மற்றும் பராமரிப்பாளர் சங்கர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கரை அதிரடியாகக் கைது செய்தனர்.
