LATEST NEWS
“பணம் வேண்டாம்… கார் வேண்டாம்…!” IAS அதிகாரி கேட்ட விசித்திர வரதட்சணை.. மணமகள் எடுத்த நெகிழ்ச்சி முடிவு.. பின்னணியில் இருந்த ரகசியம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களைக் கடந்து ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, உயர்பதவிகளில் உள்ள பல பெண்களின் வரன்கள் வந்தன. இருப்பினும், தான் ஒரு மருத்துவரை மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்காக அவரது பெற்றோர் ஓராண்டு காலம் பெண் தேடிய நிலையில், சிவகுரு பிரபாகரன் விதித்த ஒரு விசித்திரமான நிபந்தனையைக் கேட்டுப் பல பெண் மருத்துவர்களின் குடும்பத்தினர் திருமணத்திற்குத் தயங்கிப் பின்வாங்கினர்.
அவர் கேட்ட அந்த விசித்திரமான வரதட்சணை என்னவென்றால், “என்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் மருத்துவர், வாரம் இரண்டு நாட்கள் நான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் முற்றிலும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்” என்பதுதான். பணம், நகை, ஆடம்பர கார் என எதையும் எதிர்பார்க்காமல், தான் பிறந்து வளர்ந்த கிராமத்து ஏழை எளிய மக்களின் நலனை மட்டுமே வரதட்சணையாகக் கேட்ட அவரின் இந்த உன்னதமான நிபந்தனையை, சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியரின் மகளான மருத்துவர் கிருஷ்ணபாரதி மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அவர்களின் திருமணம் இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் இனிதே நடைபெற்றது. ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட உன்னதமான ‘வரதட்சணையை’ மக்கள் சேவையாகக் கொடுக்க முன்வந்து, Dr. கிருஷ்ணபாரதி அவரது வாழ்க்கைத் துணையாக இணைந்துள்ளார். உயர் பதவியில் இருந்தபோதிலும் தனது வேரையும், தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் மறக்காமல் கிராமப்புற மக்களின் மருத்துவ நலனுக்காக யோசித்த இந்த அதிகாரியும், அதற்குத் துணை நின்ற பெண் மருத்துவரும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகச் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
